ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக விசேடமாகக் கூட்டப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தங்களது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்தனர். இதனால், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தமொன்றை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா முன்வைத்த 1.78 ட்ரில்லியன் யூரோ மதிப்பிலான ஏழாண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை விட 10 சதவீதம் குறைவான தொகையாகும்.
வரவு செலவுத் திட்டத்தைக் குறைக்க வலியுறுத்தும் ஏழு நாடுகள் ஒரு அணியாகவும், பிராந்திய அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளில் மேலதிகக் குறைப்புகளை எதிர்க்கும் 17 நாடுகள் மற்றொரு அணியாகவும் செயற்பட்டன.
இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். நெதர்லாந்து பிரதமர் ரொப் யெட்டனும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஒப்பந்தமொன்று எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்குப் பின்னர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். கோஸ்டா முன்வைத்த வரவு செலவுத் திட்டக் குறைப்புகளை அவர் மூலோபாயத் தவறு என விமர்சித்தார்.
ஜேர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் முன்மொழியப்பட்ட தொகையை மேலும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தையில் மேலும் வெளிப்பட்டன.
இந்த உச்சிமாநாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் சில நாடுகளின் புறக்கணிப்பு நடவடிக்கைகளால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ ஆதரவு கடனுதவி வழங்குவது குறித்தும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வரவு செலவுத் திட்டம் தொடர்பான முரண்பாடுகள் மேலோங்கியதால், உக்ரைனுக்கான உதவி தொடர்பான விவகாரம் போதிய கவனம் பெறவில்லை.
















