டிலுக்ஷா
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் ஈடுபடாத இளைஞர்களைத் தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்து வரும் பிறப்பு வீதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையால் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சவால்களைக் குறைப்பதற்கு இது உதவும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானியாவில் பிறப்பு வீதம், மக்கள் தொகையை நீண்டகால அடிப்படையில் நிலைநிறுத்துவதற்குத் தேவையான அளவைவிடக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்காலத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவதுடன், அரசாங்கத்தின் சமூக நலச் செலவுகளுக்குப் பங்களிப்புச் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், இளைஞர்களுக்குச் சிறந்த கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் பங்களிப்புச் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை வேலைவாய்ப்புக்குள் கொண்டுவருவதுடன், முதியவர்கள் நீண்டகாலம் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துவது, மாறிவரும் மக்கள் தொகைச் சவால்களை எதிர்கொள்ள உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












