ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் (HIP) ஊடாக இதுவரை கையாளப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்தை எட்டியுள்ளதாக துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
துறைமுகத்தின் ரோல்-ஆன்/ரோல்-ஆஃப் (RoRo) செயற்பாடுகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனக் கையாளும் திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தனியான RoRo கப்பல் நிறுத்துமிடம் மற்றும் புதிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்திகள் மூலம் வாகனங்களைக் கையாளும் மற்றும் சேமிக்கும் திறனை அதிகரிப்பதுடன், துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சர்வதேச RoRo கப்பல் சேவைகளின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் (HIPG) பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கியூ (Wilson Qu), ஐந்து மில்லியன் வாகனங்களைக் கையாளும் இலக்கை எட்டியமை, சர்வதேச கப்பல் நிறுவனங்கள் துறைமுகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அதன் செயற்பாட்டுத் திறனையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனக் கையாளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
2024ஆம் ஆண்டு 579,362 வாகனங்கள் கையாளப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 726,153 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாதாந்த வாகனக் கையாளுகை 104,620 ஆகப் பதிவாகியுள்ளதுடன், இது இதுவரையான அதிகூடிய மாதாந்த பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துறைமுகத்தின் வாகன நிறுத்துமிட விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதற்கட்டமாக, ஆறு ஹெக்டேயர் பரப்பளவிலான புதிய RoRo வாகன நிறுத்துமிடம் 2026 மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், CASCADIA மற்றும் UGR ஆகிய கப்பல் சேவை நிறுவனங்கள் 2026 மே மாதம் முதல் புதிய இணைப்புச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் சர்வதேச வாகனச் சந்தைகளுடனான துறைமுகத்தின் தொடர்புகள் விரிவடைந்துள்ளன.
2017 டிசம்பரில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் கீழ் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சம் வாகனங்களைக் கையாளும் நிலையில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது ஒட்டுமொத்தமாக 50 இலட்சம் வாகனங்களைக் கையாளும் மைல்கல்லை எட்டியுள்ளது.
பிரதான கிழக்கு–மேற்கு கப்பல் போக்குவரத்துப் பாதையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்துக்கான முக்கிய பரிமாற்ற மையமாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














