துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2026.11.26 ஆம் திகதி ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலியதூவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில், 47 வயதுடைய காலி, ரிச்மன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, இக்குற்றச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் நேற்று (28) காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 31, 38 மற்றும் 41 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் கிந்தொட்ட, மாகல்ல மற்றும் காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ரத்கம பொலிஸ் நிலையத்தினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













