இளைய தலைமுறையின் ஆலோசனைகளை பெறுவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இளைஞர் மையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த புதிய செயற்திட்டத்தினை இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஒப்படைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மஹரகமவில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்திருந்தார்.இவ்விடயம் தொடா்பாக மேலும் தொிவித்த அவா்,
அரசியல் களத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்குவேன். இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகத்தை நிறுவி புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை அதிகரிக்க பாடுபடுவேன் .
ஜெனரல் இசட் தலைமுறையை இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்குவதே எனது விருப்பம்.
இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள். எதிர்காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டியது நீங்கள்தான்.
நாம் 5 வருடங்கள் முன்னோக்கிச் சிந்திப்பதா அல்லது 25 வருடங்கள் முன்னே சிந்தித்து நாட்டைக் கட்டியெழுப்புகின்றோமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
சிலர் 2048 பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை என்றார்கள். ஆனால் நாங்கள் 2048 இல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறோம்.
தாய்லாந்தும் வியட்நாமும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் வர்த்தகப் பொருளாதாரமாக மாறியது. ஆனால் நாம் ஏன் அதைப் பற்றி சிந்திக்கவில்லை?
ஆனால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை எங்கு பலப்படுத்துவது என்பதை இப்போது நாம் சிந்திக்க வேண்டும். 2020 தேர்தலுக்காக நாங்கள் வாக்களித்தோம், ஆனால் எங்கள் நம்பிக்கை ஏமாற்றமடைந்ததாக இளைஞர்கள் கூறுகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தோம் ஆனால் எங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என மற்றுமொரு குழு கூறுகின்றது. அதனால்தான் எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்கிறார்கள்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருப்பதாகவும் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை காணாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டேன்.
இதன் விளைவு ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி. அப்போது நான் உண்மையைச் சொன்னதால் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் நான் அரசியலை விட்டு விலகவில்லை.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்த போது உங்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதற்காகவே நாட்டைப் பொறுப்பேற்றேன்.
எனவே நாம் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அது குற்றமாகும்.
இந்த முடிவு உங்கள் எதிர்காலம்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.