தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் நடந்த தேர்தலுக்கான வெற்றியை அங்கீகரிக்கும் ஒரு நாள் முன்னதாக நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மியன்மார் இராணுவம் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களைக் கைதுசெய்தது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூகியை, இராணுவம் கைது செய்து ஒரு நாள் கடந்துள்ள நிலையில், அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம் இன்னும் தெரியவரவில்லை.
இந்நிலையில், ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியின் (NLD) மூத்த அதிகாரி ஒருவர் சூகியை விடுவிக்கக் கோரியதுடன், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டத்தின் பின்னர், சூகி தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அவர் நகர்த்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் எட்டாம் திகதி நடந்த தேர்தலில் சூகியின் கட்சிக்குக் கிடைத்த வெற்றியை, மோசடி குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி இராணுவம் ஏற்க மறுத்த நிலையில் அங்கு இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மியான்மரில் நடந்த இராணுவச் சதித் திட்டத்தைக் கண்டித்துள்ளனர். எனினும் தலைவர் ஆங் சான் சூகி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு வருத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.