அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால், அமுல்படுத்தப்பட்டிருந்த மிகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான மூன்று அரசாணைகளில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் உரிய ஆவணங்கள் இன்றி நுழைந்தவர்களையும் அவர்களது குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்து தடுப்பு முகாம்களில் தங்கவைக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்திருந்தார். இதன் மூலம், 5,500 குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 600 குழந்தைகள் தற்போது எங்கு உள்ளன என்பது தெரியவில்லை.
இந்தநிலையில் ஜனாதிபதி ஜோ பைடன், பிறப்பித்துள்ள முதல் அரசாணையில், ட்ரம்ப் கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான குழுவை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அரசாணையில், அமெரிக்காவில் அடைக்கலம் தேடி அகதிகள் வருவதற்கான மூல காரணங்களை ஆராயவும் அகதிகளை மனிதத் தன்மையுடன் நடத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்குமான குழுவை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு நியாயமான, செயற்திறன் மிக்க முறையில் குடியேற்ற விதிகளை சட்ட அமுலாக்க அமைப்புகள் செயற்படுத்தவதை உறுதி செய்வதற்கான உத்தரவு மூன்றாவது அரசாணையில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில், ‘குடியேற்றம் தொடர்பான அரசாணைகளைப் பிறப்பிப்பதன் மூலம், புதிய சட்டங்களை நான் பிறப்பிக்கவில்லை. முந்தைய ஆட்சியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மோசமான கொள்கைகளை நீக்குவதற்காக மட்டுமே அந்த அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளேன்.
நியாயமான, முறைப்படியான, மனிதாபிமானத்துடன் கூடிய சட்டப்பூர்வ குடியேற்றங்களுக்கு வழிவகை செய்வதன் மூலம், அமெரிக்கா முன்பை விட அதிக பாதுகாப்பாகவும் பலம் வாய்ந்ததாகவும் ஆக்குவதற்காக இந்த புதிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’ என கூறினார்.
















