இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, பாதுகாப்பு கருதி இதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா, கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்த இந்த எரிமலை நேற்று (வியாழக்கிழமை) அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து இரவு 9 மணியளவில் நெருப்புக் குழம்பையும் எட்னா எரிமலை வெளியேற்றியது.
இதன்போது விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின. இதனால் எரிமலை சாம்பல் மேகங்கள், அருகிலுள்ள இடங்களுக்கும் படர்ந்துள்ளது.
ஆண்டுக்கு பல முறை வெடிக்கும் இந்த எரிமலை தோராயமாக 10,800 அடி உயரத்துக்கு மேலெழும்பும்.
இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருவதால், வெடித்துக் கிளம்பும் ஆபத்தான அழகை தூரத்தில் இருந்தபடி சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்து வருகின்றனர்.