அமெரிக்காவின் பைஃஸர் நிறுவனமும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த நியூஸிலாந்து அரசாங்கம் முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
பைஃஸர்- பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த கடந்த வாரம் தற்காலிகமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முறையாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் விமான ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுமென அவர் மேலும் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இப்போது நாங்கள் முதல் தடுப்பூசிக்கான ஒப்புதலின் முக்கியமான கட்டத்தை அடைந்துவிட்டோம். நாங்கள் எவ்வாறு தொடர திட்டமிட்டுள்ளோம் என்பது குறித்து நியூஸிலாந்தர்களுடன் உரையாடலைத் தொடங்க நாங்கள் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதிக்குள் ஃபைசர் தடுப்பூசி நாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்றுமதி தடைகள் குறித்தும் கவலை கொண்டுள்ளனர்.
நியூஸிலாந்து கிட்டத்தட்ட வைரஸை ஒழித்திருந்தாலும், நாட்டின் 5 மில்லியன் மக்களுக்கு விரைவில் தடுப்பூசிகளைத் தொடங்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.