சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன ஜனாதிபதியுடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு வர்த்தகம் தொடருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா-சீன வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முயற்சியாக இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சீனாவின் முறையற்ற பொருளாதார நடவடிக்கைகள், ஹொங்கொங் மீதான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தமது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடுவது, உலகளாவிய சுகாதார நெருக்கடிகளால் எழுந்துள்ள சவால்கள், பருவநிலை மாற்றம், ஆயுத பெருக்கத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்தும் ஜோ பைடனும் ஜின்பிங்கும் விவாதித்துள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேநேரம், மோசமான உறவால் இரு தரப்புக்கும் பேரழிவு ஏற்படும் என்று ஜோ பைடனிடம் ஜின்பிங் எச்சரித்தார் என்று சீன அரசு ஊடகம் கூறியுள்ளது.
இரு தரப்பு உறவுகள், முக்கிய சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஜின்பிங்கும் ஜோ பைடனும் விவாதித்தனர் என்றும் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜோ பைடன், “அமெரிக்க மக்களுக்கு பலன் அளிக்கும்போது சீனாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்” என பதிவிட்டுள்ளார்.