மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள், தேசிய நோய்த்தடுப்பு மருந்துத் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தடுப்பூசித் திட்டத்திற்குத் தலைமை தாங்கும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டினருக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், வெளிநாட்டு இராஜதந்திரிகள், மாணவர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அட்டை வைத்திருப்பவர்கள் உள்ளடங்குவார்கள் என அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் மலேசியர்களுக்கு முன்னுரிமை இருக்கின்ற போதும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் போதுமான பாதுகாப்பைப் பெறுவதற்கு குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்வது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று நோயின் பெரும்பாலான கொத்தணிகள் தற்போது, அலுவலகங்கள், கட்டுமானத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணித் துறைகளிலேயே ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.