பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் அடுத்த மாதம் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ஐந்து மில்லியன் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா அளவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா’ தயாரித்த இந்த கொவிட்-19 தடுப்பூசிகள், நான்கு வாரங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உள்ளூர் சுகாதார அமைப்புகளுக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் ஏப்ரல் மாதத்தில் விநியோகம் குறைக்கப்படும் என்று இங்கிலாந்து சுகாதார சேவை எச்சரித்தது.
ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் முதல் டோஸ் வழங்குவது இன்னும் திட்டத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘சில வாரங்களுக்கு முன்பு ஐந்து மில்லியன் டோஸ் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டது, தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவில் அரசாங்க நோய்த்தடுப்புத் திட்டத்தின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பலவற்றை வழங்க முயற்சிப்போம்.
மார்ச் மாதத்தில் அடுத்த ஐந்து மில்லியனை வழங்குவதே நோக்கம் என்றாலும், அளவுகளை வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை’ என கூறினார்.