பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் வழங்க அயர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐரோப்பிய மருந்தக கூட்டுத்தாபனம் மீளாய்வு செய்த பின்னர் நாட்டின் தேசிய நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு இந்த நடவடிக்கையை பரிந்துரைத்தது.
நோர்வேயில் இரத்த உறைவு ஏற்பட்டதாக வெளியான தகவல்களுக்குப் பின்னர் அயர்லாந்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை நேற்று முன்தினம் வெள்ளியன்று, அயர்லாந்து குடியரசில் மேலும் 10 கோவிட் -19 தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 4,576 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 507 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 229,306 ஆக அதிகரித்துள்ளது.