தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.
அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வியாழக்கிழமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவுக்கு 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இத்தாலிய அரசாங்கம் தடுத்திருந்தது.
இந்த நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பின்னர் மில்லியன் கணக்கான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஒரு நிறுவனம் 27 உறுப்பு நாடுகளுக்கான தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகக் கருதப்பட்டால், புதிதாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் பிரகாரம் ஏற்றுமதியை நிறுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்படும் தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அண்டை நாடான பிரித்தானியாவுடனான பதட்டங்களை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.