அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
மத்திய கிழக்குக்கான பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், ஈரானிற்குச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தில் அவர், ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி, உயர் தலைவர் அலி ஹொசைனி கமேனியின் பிரதிநிதி அலி லரிஜானி ஆகியோர் உட்பட உயரதிகாரிகளைச் சந்தித்தார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் 2016இல் ஈரானுக்கு விஜயம் செய்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செயன்முறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அடுத்த தசாப்தத்தில் இருதரப்பு வர்த்தகத்தை 10 மடங்குக்கு மேல் 600 பில்லியன் டொலராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தத்தின் விபரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆனால், இது இராணுவ ஒத்துழைப்புக்கு மேலதிகமாக ஈரானின் முக்கிய துறைகளான எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சீன முதலீடுகளை உள்ளடக்கிய ஒரு மூலோபாய ஒப்பந்தம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் விலகியிருந்தது.
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் அதன் முழு நிதி அமைப்பையும் தடுப்புப்பட்டியலில் சேர்த்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் ஈரானுடனான ஒப்பந்தத்தை மீளப்புதுப்பிக்க விரும்பம் தெரிவித்துள்ள போதும், ஈரான் மீதாக தடைகளை நீக்குவதற்கு பைடன் மறுத்துவிட்டார். அத்துடன், தடைகளை நீக்கவேண்டுமானால் ஈரான் முதலில் ஒப்புக்கொண்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொருளாதாரத் தடைகளை நீக்குவதன் மூலம் ஒப்பந்தத்தை மீட்டெடுக்க சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.