யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) புதிதாக 25பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, ”யாழ்.மருத்துவ பீட ஆய்வு கூடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் 756 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
யாழ்.மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று நல்லூர் சுகாதார மருத்துவ பிரில் 4 பேருக்கும் ஏனைய 3 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாவர்.
இதேவேளை சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.