உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு கப்பல் எவ்வாறு தரை தட்டியது என்பது குறித்து எகிப்து அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, கப்பல் தரைதட்டியது தொடர்பான தகவல்களை சூயஸ் கால்வாய் அமைப்பின் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.
இதற்காக, எவர் கிரீன் கப்பலை நேற்று (புதன்கிழமை) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புழுதிப்புயல் காரணமாக கப்பல் தரைதட்டியதாக கூறப்படும் நிலையில், கப்பலின் மிதக்கும் திறன், கப்பல் குழுவினரின் நடவடிக்கைகள், கப்பலில் தொழில்நுட்பக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவர் கிரீன்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 23ஆம் திகதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. புழுதி புயல் காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பி தரைதட்டி நின்றதாக கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது. இதனால், உலகின் 12 சதவீத வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் 360க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. நீண்ட போராட்டடத்திற்கு பின்னர், கடந்த திங்கட்கிழமை எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது.
எவர் கிரீன் கப்பல் தற்போது சூயஸ் கால்வாயின் கிரேட் பிட்டர் லேக் என்ற பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.