கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல அது ஒரு மகத்தான வெற்றியா?
குறிப்பாக புதிய தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறை குறித்து மிகையான நம்பிக்கைகள் கட்டி எழுப்பப்படுகின்றன. அது சிரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை போன்றது அல்ல. சிரியாவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பொறிமுறை ஐ.நா. பொதுச்சபையின் கீழ் உருவாக்கப்பட்டது. எனினும், அதுகூட ஒரு கட்டத்துக்கு மேல் தேங்கி நின்றுவிட்டதாக இப்பொழுது சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேசமயம், புதிய ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் பொறிமுறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கீழானதாகவே இயங்கும். அப்படியென்றால் மனித உரிமைகள் பேரவைக்குள்ள அத்தனை வரையறைகளையும் அது கொண்டிருக்கும்.
இதன்படி, ஒரு நாட்டுக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி இந்த விசாரணைப் பொறிமுறை செயற்பட முடியாது. எனவே, இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டுக்குள் இறங்கி ஆதாரங்களைத் திரட்ட அப்பொறிமுறையால் முடியாது. நாட்டுக்கு வெளியே இருந்தபடிதான் அதைச் செய்யமுடியும்.
இப்பொறிமுறை மூலம் திரட்டப்படும் சான்றுகளும் சாட்சிகளும் இலங்கைத் தீவின் அரச படைகளுக்கு எதிராக ஒரு நீதி விசாரணையின்போது பயன்படுத்தத் தக்கவை ஆகும். இலங்கை அரச படைகளுக்கு எதிரானது என்பது அதன் இறுதி விளைவை கருதிக்கூறின் இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிரானதுதான்.
அப்படிப் பார்த்தால் தன்னை விசாரிப்பதற்காக ஆதாரங்களைத் திரட்டும் ஒரு பொறிமுறையை எந்த அரசாங்கமாவது தனது நாட்டின் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமா? இதுதான் கேள்வி.
எனவே, மேற்படி பொறிமுறை இலங்கைக்குள் இறங்கி வேலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை. அப்படியென்றால், அது நாட்டுக்கு வெளியே இருந்தபடிதான் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும்.
அப்படித்தான் இதற்கு முன்னரும் சில ஆவணங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து தொகுக்கப்பட்டன. அவ்வாறு நாட்டுக்கு வெளியே இருந்து தகவல்களைத் தொகுக்கும் பொழுது அதுவிடயத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம்தான் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதற்குமுன்பு தொகுக்கப்பட்ட ஆவணங்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழர்களே அதிகம் உழைத்தனர். எனவே, புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒத்துழைப்பின்றி அந்தப் பொறிமுறையை முன்னெடுக்க முடியாது. இதை சரியாக ஊகித்த காரணத்தால்தான் இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறது.
புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் பட்டியலிட்டும் தடை செய்திருக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் பல ஏற்கனவே தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து 2015இல் தடை நீக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
இதில், தற்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 27 பேரின் பெயர்களும் உண்டு. தடைசெய்யப்பட்ட உலகத்தமிழர் பேரவையின் தலைவரான கத்தோலிக்க மதகுரு இப்பொழுது யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். அரசியல் மற்றும் திருச்சபை நடவடிக்கைகளிலிருந்து பெருமளவுக்கு ஓய்வு பெற்றுவிட்ட அவரை யாழ்ப்பாணத்தின் சாலைகளில் சைக்கிளில் திரியக் காணலாம்.
கடந்த மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடைகள் அகற்றப்பட்டன. இவ்வாறு தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை 30/1 ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவானவை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு. இதன்மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்தாள முடியும். அதோடு, அவர்களைத் தாயகத்துக்கு வர அனுமதித்து இங்குள்ள கள யதார்த்தத்தோடு தொடர்புற வைப்பதன்மூலம் நாட்டுக்கு வெளியே பிரிவேக்கத்தோடு அவர்கள் முன்னெடுக்கும் அரசியலின் தீவிரத்தை தணிக்கலாம் என்றும் மேற்கு நாடுகளும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமும் சிந்தித்தன.
அதைத்தான் கஜேந்திரகுமார் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் சில அமைப்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்பவை என்றும் சுட்டிக் காட்டினார்.
இந்த அமைப்புகளில் சில இம்முறையும் ஜெனிவா தீர்மானத்தை உருவாக்க கருக்குழு நாடுகளோடு சேர்ந்து உழைத்திருக்கின்றன என்பதைத்தான் அவை நடத்திய பத்திரிகையாளர் மாநாடுகள் வெளிப்படுத்துகின்றன. ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேற்படி அமைப்புகள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் தீர்மானத்தை ஒரு வெற்றியாகக் காட்டுவதும் அதிலுள்ள சில விடயங்களை முக்கிய முன்னேற்றங்களாகக் காட்டுவதையும் காணமுடிகிறது.
13ஆவது திருத்தம், வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல், தமிழ் என்ற வார்த்தை தீர்மானத்தில் இணைக்கப்பட்டமை, சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை போன்றவையே அவர்கள் சுட்டிக்காட்டும் முன்னேற்றங்கள் ஆகும்.
இவ்வாறு புதிய ஜெனீவா தீர்மானம் தொடர்பாக பிரித்தானியாவையும் கனடாவையும் மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. புதிய ஜெனீவா தீர்மானத்தை உருவாக்கியதில் மேற்படி அமைப்புகளுக்கும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு பங்களிப்பு உண்டு. இலங்கை அரசாங்கம் அவ்வாறு கருதுவதால்தான் ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரான தனது முதல் நகர்வை மேற்படி அமைப்புகளுக்கு எதிராக எடுத்திருக்கிறதா?
ஆனால், இங்கேயுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் தமிழ் நோக்கு நிலையிலிருந்து பலவீனமான ஒரு தீர்மானத்தை அல்லது தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு பெருவெற்றி என்று கருதமுடியாத ஒரு தீர்மானத்தைக் கடுமையான தீர்மானமாக எடுத்துக்கொண்டு அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளதா? என்பதுதான்.
அரசாங்கத்தின் தடை தம்மை பெரியளவில் பாதிக்காது என அவ்வமைப்புக்கள் கூறுகின்றன. உண்மைதான். இத்தடை அவர்களை நேரடியாகப் பாதிக்காது. ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடையூட்டத்தைப் பாதிக்கும்.
புலம்பெயர்ந்த தமிழ் தரப்பிலிருந்து தாயகத்திற்கு வரக்கூடிய உதவிகளையும் இரண்டு தரப்புக்கும் இடையிலான தொடர்புகளையும் அரசாங்கம் தனக்கு வசதியான விதத்தில் சட்டவிரோதமாகக் காட்டி தாயகத்தில் இருக்கும் செயற்பாட்டாளர்களைத் தூக்கி உள்ளேபோட இது உதவக்கூடும்.
எனவே, இதன் உடனடிப் பாதிப்பு தாயகத்தில் வாழும் செயற்பாட்டாளர்களுக்குத்தான். இப்படிப்பார்த்தால் அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரான தனது முதல் நகர்வின்மூலம் தாயகத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் இடையிலான இடையூடாட்டத்தைக் குறைக்க எத்தணிக்கிறது என்று தெரிகிறது.
இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பைக் கையாண்டு தனக்கு வசதியான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்த மேற்கு நாடுகளுக்கு ஒரு பொறுப்பு உண்டு. ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரான இலங்கையில் முதல் நகர்வு எனப்படுவது புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்கு மட்டும் எதிரானது அல்ல. தர்க்கபூர்வ விளைவுகளைக் கருதிக்கூறின் தீர்மானத்தைக் கொண்டு வந்த கருக்குழு நாடுகளுக்கும் எதிரானதுதான்.
எனவே, இதுவிடயத்தில் மேற்கு நாடுகளுக்கு ஒரு பொறுப்பு உண்டு, தீர்மானத்தின் விளைவு அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ இல்லையோ உடனடிக்கு தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை அரசாங்கம் ஐ.நா.வுக்கும் கருக்குழு நாடுகளுக்கும் உணர்த்தியிருக்கிறது.
அதேசமயம், இதுவிடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புகளுக்கும் ஒரு பொறுப்பு உண்டு, இதை நான் எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். டயஸ்போறாவுக்கும் தாயகத்துக்கும் இடையே ஏற்றுக்கொள்ளத்தக்க சேர்ந்தியங்கும் தளங்களையும் வழிமுறைகளையும் டயஸ்போறா உருவாக்க வேண்டும்.
ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயகச் சூழலைக்கொண்ட நாடுகளில் வசிக்கும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தூக்கும் கொடிகளும், சின்னங்களும் தாயகத்திலுள்ள செயற்பாட்டாளர்களோடு அவர்கள் உறவுகளை வைத்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கக்கூடாது.
இது விடயத்தில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் சமூக இடையூடாட்டத் தளங்களை உருவாக்க வேண்டும். இது மிக அவசியம். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்துக்கும் இடையிலான உறவுகளைக் கட்டுப்படுத்தினால் நீண்ட எதிர்காலத்தில் தமிழ் தேசிய அரசியலின் இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று அராங்கம் நம்புகிறது.
கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்