தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 372 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர முன்னாள் இராணுவத்தினர், ஊர் காவல் படையினர், தீயணைப்பு படையினர், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்களான ஜெயலலிதா மற்றும், கருணாநிதி ஆகிய இருவரும் இன்றி நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.