மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அலுவலர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆயரின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, இலங்கை ஆயர் மன்றத் தலைவர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி, கொழும்பு பேராயர் மற்றும் பிரதமர் ஆகியோரின் இரங்கல் செய்திகள் இதன்போது வாசிக்கப்பட்டன.
இதனையடுத்து, ஆயரின் திருவுடல் பேராலயத்திற்குள் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதுடன் மன்னார் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆயரின் திருவுருவச்சிலையும் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டமே சோக மயம்- பூரண கடையடைப்புடன் துக்கம் அனுஷ்டிப்பு! (முதலாம் இணைப்பு)
மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக வீதிகள், வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் சோக மயமாகக் காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள இனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு,தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை.
இதேவேளை, வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆயரின் பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை மூன்று மணியளவில் இலங்கையின் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.