மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ஒரு வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரமான விவிபாட் இயந்திரமும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம், ஹவுரா மாவட்டத்திலுள்ள துள்சிபேரியா என்ற கிராமத்தில் வைத்தே இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் முன்பு தேர்தல் ஆணையகத்தின் அடையாளம் ஒட்டப்பட்ட வாகன நிற்பதை அப்பகுதி மக்கள் அதிகாலையில் கண்டநிலையில் தேர்தல் ஆணையகத்துக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, அங்கு சென்றிருந்த தேர்தல் ஆணையக அதிகாரிகள், இவ்வாறு தேர்தல் மின்னணு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நான்கு மின்னணு இயந்திரங்களும் தற்போது நடைபெற்றுவரும் மூன்றாம் கட்டத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் மாநில தேர்தல் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.