இயற்கை விவசாயத்தின் தந்தை எனப் போற்றப்படும் நம்மாழ்வாரின் பிறந்தநாள் (ஏப்ரல்-6, 1938) இன்றாகும்.
தமிழகத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடுகளால் மண்வளம் பாதிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய நம்மாழ்வார், இயற்கை வளங்களையும் இயற்கை விவசாயத்தையும் பாதுகாக்க மக்களிடத்தில் விழிப்புணர்வுகளைப் பரப்பினார்.
இதற்காக ஒருகட்டத்தில், மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் அரச பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
அத்துடன், விழிப்புணர்வுக் கூட்டங்களில், ‘நெல்லின் அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’ என்ற வார்த்தையை விழித்துப் பேசிவந்தார்.
பசுமைப்புரட்சி, உலகமயமாதலால் ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பைத் தடுப்பதற்காக பல்லாயிரக் கணக்கான விவசாயிகளைச் சந்தித்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பரப்பினார்.
இந்நிலையில், தமிழகத்தில் பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாயம் குறித்து தற்போது ஏற்பட்டுள்ள அக்கறை மற்றும் விழிப்புணர்வுக்கு நம்மாழ்வார்தான் காரணம் என்பது பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கவும் பாடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நெல் ஜெயராமனை ஊக்குவித்து 200 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தார்.
இதனைவிட, ஒற்றை நாற்று நடவு மற்றும் செம்மை நெல் சாகுபடியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பதை ஆதாரங்களுடன் நம்மாழ்வார் எடுத்துரைத்தார். அத்துடன், நாட்டு மரங்கள், நாட்டு மாடுகள், மற்றும் நாட்டு விதைகளின் அவசியமும் இவரால் எடுத்தியம்பப்பட்டது.
இதனைவிட, நம்மாழ்வார் எழுதியுள்ள ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘இனி விதைகளே பேராயுதம்’, ‘நோயினைக் கொண்டாடுவோம்’ போன்ற பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
1938ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் இளங்காடு கிராமத்தில் பிறந்திருந்த நம்மாழ்வார், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை கல்வியை முடித்திருந்தார்.
அத்துடன், வேளாண்மையை, வாழ்வியலை மீட்கப் போரடிய நம்மாழ்வார், தனது இறுதிக் காலத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கொண்டுவரப்படவிருந்த மீத்தேன் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதுடன், அந்தப் போராட்டக் களத்திலேயே 2013ஆம் டிசம்பர் 30ஆம் திகதி இயற்கை எய்தினார்.