ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இலங்கை பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று (வியாழைக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தால் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் முறையாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
தடுப்பூசி செலவு குறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது மற்றும் உறைவிப்பானுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும்.
அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் வைரஸின் மோசமான விளைவுகளுக்கு எதிரான அதன் செயல்திறனை கண்டறிந்தன.
கடுமையான நோயைத் தடுப்பதில் இது 85 வீதத்துக்கும் மேலானது என்று தரவு காட்டியது. ஆனால் ஒட்டுமொத்தமாக 66வீதம் மட்டுமே பயனுள்ளதாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
தடுப்பூசி பெற்றவர்களிடையே எந்த இறப்பும் இதுவரையில் பதிவாகவில்லை என்பதுடன், தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பின்னர் 28 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.