மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில பொருட்களைக் கொண்டு போராட்டக்காரர்கள் பொலிஸாருக்கு எதிராகப் போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளன.
மியன்மாரின் டேஸ் நகரில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆறு லொரிகளில் முன்னர் துருப்புக்கள் அழைத்துவரப்பட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் மேலும் ஐந்து வாகனங்களில் துருப்புக்கள் அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது துருப்புக்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 20 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போராட்டக்காரர்களின் தாக்குதலில் துருப்புக்களுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் இராணுவப் புரட்சி ஏற்படுத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதுன் சூகி உட்பட முக்கிய அரசிய்ல பிரமுகர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மியன்மாரிர் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் துப்பாக்கிச் சூடுகளை நடத்திவருகிறது.
இந்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுத்தப்பட்டது முதல் நேற்று புதன்கிழமை மாலை வரையான நிலைவரப்படி 598 பேர் கொல்லப்பட்டதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளதுடன் இன்று கொல்லப்பட்டவர்களுடன் சேர்ந்து உயிரிழப்புக்கள் 600ஐக் கடந்துள்ளன.