எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.
அத்தோடு அவரது உடல் இருக்கும் சவப் பெட்டியை, பொது வெளியில் மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்படப் போவதில்லை. அதற்கு பதிலாக, இளவரசர் ஃபிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, வின்சர் கோட்டையில் இருக்கும் தனி தேவாலயத்தில் வைக்கப்படவிருக்கிறது.
பொதுமக்கள், பூங்கொத்துகளை வைப்பதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்வுக்காக, யார் எல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது யார் எல்லாம் இறுதி நிகழ்வில் பங்கெடுக்கவிருக்கிறார்கள் என்கிற விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.