இத்தாலியிடம் இருந்து 83 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, பயிற்சி ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை துருக்கி அவமதித்ததாக இத்தாலி கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துருக்கியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இது குறித்து இத்தாலி உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகிய இருவரும் அண்மையில் துருக்கிக்கு சென்றிருந்த போது, தலைநகர் அங்காராவில் நடந்த சந்திப்பில் 3 நாற்காலிகளுக்கு பதிலாக 2 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனியாக நின்றார்.
துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் வேண்டுமென்றே ஐரோப்பிய ஐரோப்பிய தலைவர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை கண்டித்த, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, எர்டோகனை சர்வாதிகாரி என கடுமையாக சாடினார்.