ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
டஸன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பாரிய ‘சோலார் விண்ட்ஸ்’ இணைய ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020ஆம் ஆண்டு தேர்தலில் மாஸ்கோ தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.
வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில் விரிவாக உள்ளன.
முன்னதாக கடந்த மாதம் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா ஏழு ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ஒரு டஸன் அரசாங்க நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.