இலங்கையில் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி ஐம்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு, இந்த விபத்துக்களில் சிக்கி 669 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் இந்த காலகட்டத்தில் சுமார் 399 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்த 2 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
12 பேருந்துகள், 38 லொரிகள், 128 கார்கள், 553 முச்சக்கர வண்டிகள், ஆயிரத்து 429 மோட்டார் சைக்கிள்கள், 22 வண்டிகள் மற்றும் 22 ஏனைய வாகனங்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீதி உணர்வுடன் வாகனம் ஓட்டுவதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மதித்தல், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அவர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டார்.