கெய்ரோவின் வடக்கே எகிப்தின் கலியோபியா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளதோடு 98பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோவிலிருந்து நைல் டெல்டா நகரமான மன்சோவுராவுக்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, கெய்ரோவிலிருந்து வடக்கே சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில் மதியம் 1:54 மணிக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன என்று எகிப்திய தேசிய ரயில்வே ஒரு குறுகிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற 50 ஆம்புலன்சுகள் காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் சென்றன. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக எகிப்தின் ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த அதிவேக ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்தாகும்.