18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரஷ்யா அறிவித்துள்ளது.
செக் குடியரசு சனிக்கிழமையன்று 18 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது. அவர்களுக்கு 72 மணிநேர கால அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது செக் இராஜதந்திரிகளுக்கு வெளியேற மாஸ்கோ ஒரு நாள் கால அவகாசம் அளித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செக் குடியரசின் முடிவு முன்னோடியில்லாதது மற்றும் விரோத செயல்.
ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் பின்னணியில் அமெரிக்காவை மகிழ்விப்பதற்கான செயல் இது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2018ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் ஒரு உளவாளி மீது விஷத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ரஷ்ய உளவாளிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செக் குடியரசு வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பின் பின்னணியில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
செக் மண்ணில் ரஷ்யாவின் மோசமான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எடுத்த உறுதியான நடவடிக்கையினை அமெரிக்க வெளியுறவுத்துறை பாராட்டியுள்ளது.