ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 25 முதல் மே 11 வரை அவசரகாலநிலை அமுலில் இருக்குமென பிரதமர் யோஷிஹைட் சுகா இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.
டோக்கியோவில் கோடைக்கால ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு மூன்று மாதங்களே இருக்கின்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஜப்பான் அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இதற்கிடையே ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து மே முதல் வாரம் வரை ஜப்பானின் கோல்டன் வீக் விடுமுறை நாட்கள் வரவுள்ளதால் மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகாலநிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து இதுவரையான நிலைவரப்படி ஐந்து இலட்சத்து 50ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் ஒன்பதாயிரத்து 805 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.
இந்த சூழலில், 2020ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குப் பிற்போடப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ள அரசாங்கம் மற்றும் ஒலிம்பிக் அமைப்பாளர்களை கொரோனா தொற்று அதிகரிப்பானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.