ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரித்தானியாவுடன் மேற்கொள்ளபடவிருக்கும் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய ஒன்றியனுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 660 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒப்பந்தத்தை எதிர்த்து 5பேர் வாக்களித்திருந்தனர் 32பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையே வாக்கெடுப்பு நடைபெற்றாலும், அதன் முடிவுகள் புதன்கிழமைதான் வெளியிடப்பட்டது.
பிரெக்ஸிட் தொடர்பாக பிரித்தானியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன்படி நீண்டி இழுபறிக்கு பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக விலகியது.