மியன்மாரில் தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தாய்லாந்திற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய தரவுகள் படி 2 ஆயிரத்து 267 பேர் தாய்லாந்திற்குள் நுழைய முற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான கிராம வாசிகள் சல்வீன் (Salween) நதி பக்கத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், கரேன் தேசிய ஒன்றியத்தின் படைகளுக்கும் மியன்மார் இராணுவத்தினருக்கும் இடையில் சண்டை அதிகரித்தால் அவர்கள் தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதாகவும், கரேன் அமைதி ஆதரவு வலையமைப்பு The Karen Peace Support Network தெரிவித்துள்ளது.
இதேவேளை மியன்மாரில் இராணுவ ஆட்சியை கண்டிக்கும் வகையில் அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மியன்மார் இராணுவ தலைமை தளபதி மின் ஆங் லாயிங் உள்ளிட்ட அதிகாரிகள், எல்லைக் காவல் படையினர், அரச அதிகாரிகள் மீது சொத்து முடக்கம், பயனத்தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.