ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டன் – டயகம பிரதான வீதியில் அமைந்துள்ள தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
அந்த தோட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து என்பீல்ட் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட போடைஸ் தோட்டத்திற்கு பயண தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று காலை பயணத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து போடைஸ் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
எனவே கடந்த பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாம் தோட்ட தொழிலையும் இழந்து வருமானமில்லாது அவதிப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் மேற்படி பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்வை பெற்று தருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஒன்று கூட முடியாது எனவும் பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அறிவித்தனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை மக்கள் கைவிட்டனர்.