பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தேவையானவரை தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களின் கட்டடங்கள் தரைமட்டமாகின.
மக்கள் வெளியேறுவதற்கு ஒரு மணிநேரம் அவகாசம் கொடுத்த பின்னர், வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம், குறித்த கட்டடக் கோபுரத்தை முற்றாக அழித்துள்ளது.
காஸா பகுதியைத் தொடர்ந்து மேற்குக் கரை பகுதியிலும் இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து, இதுவரையில், நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 41 குழந்தைகள் உட்பட 145 பேர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி முஹமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்குமாறு கூறினார்.
காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா இஸ்ரேலிடம் “ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகங்களின் பாதுகாப்பைஉறுதி செய்வது மிக முக்கியமான பொறுப்பு” என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.