தமிழர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தங்களது அலுவலகங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.
அவர் எழுதிய கடித்தில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் ஏழு பேரின் விடுதலை குறித்து தெரிவித்துள்ளார்கள். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் அதை வலியுறுத்தவில்லை.
எனவே எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் ஏழுபேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என தெரிவித்துள்ளார்.