இதுவரை செயற்படுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
நாட்டில் நாளாந்தம் 3000 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படும் நிலையில் சமூகத்தில் இந்த எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம் இருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த உண்மைத்தன்மையை கருத்திற்கொண்டு இரு வாரங்கள் நாட்டை முழுமையாக முடக்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து மாகாணங்களிலும் தொற்று பரவலாக உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் எந்தப் பயனும் அளிக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து 5 – 7 நாள் தாமதத்துடனேயே கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கை கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு குறுகியகால முடக்கம் காரணமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என்றும் இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் எவ்வித நன்மைக்கும் வழிவகுக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் முடிவு ஆகியவை சம்பந்தப்பட்ட நிபுணர் குழுக்களின் ஆலோசனையின் அடிப்படையில் இருக்கும் என்றும், மக்கள் சார்பாக சரியான முடிவை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் நேற்று ஜனாதிபதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.