இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற சபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
47 வது சட்டமா அதிபராக பணியாற்றிய தப்புல டி லிவேரா இன்றுடன் (திங்கட்கிழமை) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவுக்கே அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், வெற்றிடமாக உள்ள காணாமற் போனோர் தொடர்பான அலுவலக உறுப்பினர் பதவிக்கு எச். ஜெயந்த சாந்த குமார விக்கிரமரத்னவை நியமிக்க நாடாளுமன்ற சபை பரிந்துரைத்தது.
இதேவேளை வெற்றிடமாக உள்ள இழப்பீட்டு அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கு மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யூ. பி. பெர்னாண்டோவை நியமிக்க நாடாளுமன்ற சபை பரிந்துரை செய்துள்ளது.