வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் நாளை (புதன்கிழமை) நண்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் தீவிர புயலாக உருவாகி ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து 390 கிலோமீற்றர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து 470 கிலோமீற்றர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இன்று மாலை அதிதீவிர புயலாக உருமாறும் குறித்த புயல், ஒடிசா பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே கரையை கடக்கவுள்ளது.
இதன்போது மணிக்கு 165 முதல் 185 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக கடற்படை, விமானப்படை, மற்றும் தேசிய பேரிடர் மீட்புபடை என்பன தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒடிசாவில் தாழ்நிலங்களில் குடியிருந்தவர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.