இலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்லாது நிலத்தை அண்டிய கடலிலும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மே 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத்தமர்வுகளில் “இலங்கை தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’ தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்” என்ற தொனிப்பொருளில் கருத்தாய்வு இடம்பெற்றது.
பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கெடுத்திருந்த இந்தக் கருத்தமர்வு காணொளி தொடர்பாடல் மூலம் நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், இலங்கையில் சீன துறைமுகப் பட்டினம் பற்றியும் தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்லாது நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.
தொடர்ந்து, மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் சம்மத்தினைப் பெறாது எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ் அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக, இலங்கை தீவில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, இந்தியாவுடன் மட்டும் ஈழத் தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக் பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.