இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில் பதிவான மரணங்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை பல நிபுணர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த சந்தேகங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக மாத்திரம் இந்தியாவில் 16 இலட்சம் பேர்வரை உயிரிழந்திருக்கக்கூடும் என அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் கயோகோ ஷியேடா என்பவர் மருத்துவ மனைகளைவிட வீடுகளிலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிராம புறங்களில் வசிக்கும் மக்கள் கொரோனா தொற்றுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் வீட்டிலேயே உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிராம புறங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற கூற்றையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது நாளொன்றுக்கான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4-5 ஆயிரத்திற்கு இடைப்பட்டதாக காணப்பட்டது. அத்துடன் சடலங்களை எறிப்பதற்கு கூட இடமற்ற நிலையில், மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்தனர்.
அதேநேரம் பெருமளவான உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டிருந்தன. இவ்வாறு வீசப்பட்ட உடல்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் உடல்கள்தானா என்ற சந்தேகம் இருந்தாலும், தகனமேடைகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் உடல்கள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கூற்றையும் நிபுணர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த சூழலில் கொரோனா தொற்றினால் இந்தியாவில் உயிரிழந்திருப்போரின் எண்ணிக்கை தரவுகளில் கூறப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.