யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது.
யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தடுப்பூசித் திட்டம், மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, நேற்று 11 சுகாதாரப் பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 பிரிவுகளில் நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றைய நாளில் பெயரிடப்பட்டவர்களில் 52 வீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், இன்று 10ஆயிரத்து 52 பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டபோதும் ஆறாயிரத்து 72 பேர் மாத்திரமே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட 29 கிராம அலுவலகர் பிரிவுகளில் 17 நிலையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.