நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது.
உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போர் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகர்க்கின்றன. மேலும், பொருத்தமான பதில் நடவடிக்கைகளை எடுக்க நம்மை கட்டாயப்படுத்துகின்றன. அதன்படி, மேற்கு இராணுவ மாவட்டத்தில் நிகழாண்டு இறுதிவரை மேலும் 20 இராணுவப் பிரிவுகளை உருவாக்குவோம்’ என கூறினார்.
கடந்த மாதம் உக்ரேன் எல்லை அருகே ரஷ்யாவின் தெற்கு, தென்மேற்குப் பகுதியில் ரஷ்யா ஏராளமான படைகளைக் குவித்தது. இது உக்ரேனை கவலையடையச் செய்தது. ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டுமென மேற்கு நாடுகள் வலியுறுத்தின.
மேற்கு ரஷ்யாவில் உள்ள இராணுவப் பிரிவுகள் இந்த ஆண்டு சுமார் 2,000 புதிய ஆயுதங்களை சேர்த்துள்ளன.
ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறுகையில், ‘கடந்த ஆண்டுகளில் ரஷ்யா புதிய, நவீன இராணுவ திறன்களில், வழக்கமான முதல் அணு ஆயுத அமைப்புகள் வரை பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அண்டை நாடுகளுக்கு எதிராக இராணுவ சக்தியைப் பயன்படுத்த தயாராக உள்ளது
கடந்த ஆண்டுகளில் நேட்டோ (அதன்) ஆயுதப்படைகளின் தயார்நிலையை அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணம்’ என கூறினார்.
தற்போது, ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்கள், பல போர்க்கப்பல்கள் மற்றும் டசன் கணக்கான விமானங்கள் அட்லாண்டிக் முழுவதும், ஐரோப்பா வழியாக மற்றும் கருங்கடல் பகுதி வரை இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கின்றன.