1921 இல் நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட ஓக்லஹோமாவின் துல்சாவில் உள்ள இடத்தை முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் சென்று பார்வையிட்டுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விஜயத்தை அடுத்து கருத்து தெரிவித்த அவர், இனவெறி வன்முறை மற்றும் வெள்ளை மேலாதிக்க முறை தற்போதும் காணப்படுவதாகவும் கூறினார்.
துல்சாவின் கிரீன்வுட் மாவட்டத்தின் மீதான தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் முன்பாக பேசிய ஜனாதிபதி, “நல்லது, கெட்டது, எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் பெரிய நாடுகள் செய்கின்றன” என கூறினார்.
அதன்படி அமெரிக்க கபிடல் மீதான ஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வாக்களிப்பைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களின் முயற்சிகள் அதே பிரச்சினையின் எதிரொலி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்க வன்முறைகளை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் தனது நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
துல்சாவில் உள்ள வெள்ளையர்கள் 1921 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் 300 கறுப்பின மக்களை சுட்டுக் கொலை செய்ததுடன் அவர்களின் வீடுகளையும் வணிக நிறுவங்களையும் குறிவைத்து தாக்கினர்.