கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட உயரதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடாலை இன்று (புதன்கிழமை) மாலை நடத்தியிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோரடன் குழு தொலைபேசி தொடர்பாடல் மூலம் இந்தக் கலந்துரையாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்தினார்.
இதன்போது, ஆடைத்தொழிற்சாலையின் தற்போதைய கொரோனா தொற்று நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது.
கிளிநொச்சியில் உள்ள விடியல் தொழிற்சாலையிலேயே இதுவரையில் அதிகளவானோருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு, இதுவரையில் 172 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டிருப்பதுடன், 400 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்திய கலாநிதி சரவணபவன் தெரிவித்தார்.
அத்துடன், இரண்டு பணி நேரமாக சுழற்சி முறையில் நடத்தப்பட்டுவரும் தொழிற்சாலைப் பணிகளில், ஒரு பணிநேரத்தில் வேலைசெய்தவர்கள் மத்தியிலேயே அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மற்றைய பணிநேரத்தில் பணியாற்றியவர்கள் ஓரளவுக்கு சுமுகமாகப் பணியைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி சரவணபவன் அமைச்சரிடம் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இறுதியாகச் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை எனவும் ஆடைத் தொழிற்சாலைத் தொற்றாளர்கள் மூலம் சமூக மட்டத்தில் தொற்றுப் பரவல் எதுவும் ஏற்படவில்லை என்றும் வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆடைத் தொழிற்சாலையை மூடவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினவியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், எந்தவொரு தொழிற்சாலை நடவடிக்கைகளையும் இடைநிறுத்தவேண்டாம் என்று பணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்துடன், நோய்த் தொற்றுள்ளவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்றுப் பரவல் தொடராமல் தொழிற்சாலைகளின் பணிகளைத் தொடருமாறு அவர் ஆலோசனை கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேபோல், ஆடைத்தொழிற்சாலைத் தொற்றாளர்களால் பயணத்தடை கடுமையாக்கப்பட்ட சாந்தபுரம் கிராமத்து மக்களின் பிரச்சினைகள் குறித்து இணைப்பாளர் வை.தவநாதன் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலேயே தங்கியிருந்து தொழில்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக உணவகமொன்றைத் திறந்து செயற்பட ஏற்பாடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்தள பணியாளர்களர்களுக்கு தடுப்பூசி வழங்கலின்போது முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் தவநாதன் வேண்டுகொள் விடுத்தார்.
இதையடுத்து. அம்மாச்சி உணவகத்தை அதற்கேற்ற வகையில் உணவை எடுத்துச்சென்று உண்ணும் ஏற்பாட்டுடன் செயற்பட ஒழுங்குசெய்யுமாறு மாவட்டச் செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தடுப்பூசி வழங்கல் விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.