நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14 அன்று பயண கட்டுப்பாடுகளை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலரின் அன்றாட நடவடிக்கைகள் முன்பு போலவே இருந்தது என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், 90 சதவீத மக்கள் பயணத்தை மிச்சப்படுத்துவோம் என எதிர்பார்த்த போதும், துரதிர்ஷ்டவசமாக, எதிர்பார்க்கப்பட்ட விகிதத்தை தங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.
குறிப்பாக கொழும்பில் உள்ள ஒவ்வொரு அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளாக செயற்படுகின்றன என்றும் இருப்பினும் எந்தவொரு பொது போக்குவரத்து சேவையும் இயங்கவில்லை என்றும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கொரோனா தொற்றின் நாளாந்த எண்ணிக்கையின் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த உபுல் ரோஹண, தற்போது மூன்றாவது அலையிலிருந்து நோயாளிகளின் முதல் தொடர்புகளை மட்டுமே அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
பி.சி.ஆர் வசதிகள் இல்லாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளுக்கு சோதனைகளை நடத்த முடியவில்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதும் அவர்கள் இப்போது பயணம் செய்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.