பாடசாலை மாணவர்களுக்கு இணைய இணைப்புகளை இலவசமாக வழங்குங்கள் என அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீடொன்றில் ஒரு தொலைபேசி மாத்திரமே உள்ளது. ஆனால் அந்த வீட்டில் உள்ள இரண்டு பிள்ளைகள் சூம் ஊடாக கற்கவேண்டி வந்தால் அது மிகவும் கஸ்டமாகும்.
நாங்கள் எதிர்கட்சி உறுப்பினர்களாக இருந்து கொண்டு யோசனை ஒன்றினை முன்வைக்க முடியும். பதிவு செய்யப்பட்ட காணொளிகளை யூடியுப் இல் பதிவேற்றம் செய்யுங்கள்.
அவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் கற்பிக்கின்ற காணொளிகளை யூடியுப் இல் பதிவேற்றம் செய்தால், அதேபோன்று இணைய இணைப்புகளை இலவசமாக வழங்க முடியும் என்றால் அது மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.“ எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, “உங்களுடைய யோசனை குறித்து நாங்கள் ரி.ஆர்.சி, ஐ.சி.ரி உடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்.
சூம் போன்று ஐ.சி.ரி இனால் உருவாக்கப்பட்டுள்ள செயலி ஒன்று உள்ளது. இதற்கு ரி.ஆர்.சி ஊடாக இணைய கட்டணம் இன்றி மாணவர்கள் கல்வி கற்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
இன்னும் ஒரு சில தினங்களில் அதுகுறித்த முழுமையான விடயங்களை வழங்க முடியும். சூம் செயலி இன்றி மாணவர்கள் இலவசமாக கல்வி கற்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.“ எனக் குறிப்பிட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்த இரா.சாணக்கியன், பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி செய்கையாளர்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார், “நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்பினை ஏற்படுத்தி ஏதாவது செய்து தர முடியுமா என கேட்கின்றனர்.
எங்களால் முடிந்தது இங்கே வந்து அவர்களுக்காக பேசமுடிந்தது மாத்திரமே.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.