பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது.
மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ஏழு பெரிய மேம்பட்ட பொருளாதார நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘சீனாவை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின.
இது உய்குர் முஸ்லீம் சிறுபான்மைக் குழுவிற்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவையை உள்ளடக்கியதாகும்.
ஆனால், பிரித்தானியாவிலுள்ள சீனாவின் தூதரகம், ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘சீனாவை அவதூறு செய்வதை நிறுத்துங்கள், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள், சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்துங்கள்’ என கூறினார்.