அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கிடையில் அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக எஞ்சியுள்ள ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும், இருநாடுகளின் தூதர்களை மீண்டும் பணியமர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையில் சுவிஸ்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தை 4 மணித்தியாலங்கள் முதல் 5 மணித்தியாலங்கள் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மணித்தியாலங்களுக்குள் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், ‘அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் என்னுடன் மனித உரிமை விவகாரங்கள் குறித்து உரையாடினார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி குறித்தும் அவர் விவாதித்தார். அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக அமெரிக்கா- ரஷ்யா இடையே எஞ்சியுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இருவரும் தீர்மானித்துள்ளோம்.
அமெரிக்காவில் இருந்து ரஷ்ய தூதரும், ரஷ்யாவில் இருந்து அமெரிக்க தூதரும் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கும், இணையவழி பாதுகாப்பு ஆலோசனைகளை தொடங்கவும் இருவரும் ஒப்புக் கொண்டோம்.
இந்தப் பேச்சுவார்த்தை எந்த விரோதமும் இல்லாமல் ஆக்கபூர்வமாக அமைந்தது. எனினும் அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் பரஸ்பர நலன் குறித்த நம்பிக்கை தென்பட்டுள்ளது’ என கூறினார்.
இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ‘எனது செயற்திட்டம் ரஷ்யாவுக்கு எதிரானது அல்ல எனவும், அமெரிக்க மக்களின் நலன் சார்ந்தது என்றும் புடினிடம் தெளிவுபடுத்தினேன். இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. புடினுடன் ஆயுதங்கள் கட்டுப்பாடு, இணையவழி தாக்குதல் குறித்தும் ஆலோசித்தேன். அவற்றுக்கான உட்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன்’ என கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பதற்றமான தருணங்களிலும் இருதரப்புக்கும் பொதுவான இலக்குகளை எட்டுவதில் இருநாடுகளும் முன்னோக்கிச் செல்ல முடிந்ததை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு அவர் புடினை நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.