தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றது.
இரண்டாம் அலையில், ஒரேநாளில் உச்சபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்புக் குறைந்து வருகிறது.
இதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) எட்டாயிரத்து 633 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 24 இலட்சத்து ஆறாயிரத்து 497 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 287 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 30 ஆயிரத்து 835ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 19 ஆயிரத்து 860 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 22 இலட்சத்து 86 ஆயிரத்து 653ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்னும் 89 ஆயிரத்து ஒன்பது பேர் மாத்திரமே தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.